பூமிக்கடியில் மின்கேபிள்கள் அமைக்கும் பணி

பூமிக்கடியில் மின்கேபிள்கள் அமைக்கும் பணி

Update: 2021-06-15 15:14 GMT
துடியலூர்

கவுண்டம்பாளையத்தில் மின்கம்பத்திற்கு மாற்றாக பூமிக்கடியில் மின்கேபிள்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் குடிநீர் குழாயின் மிக அருகே கேபிள் செல்வதாக புகார் எழுந்துள்ளது.

மின்கம்பங்களால் பாதிப்பு

ஒவ்வொரு நகரிலும் முக்கிய ரோடுகள் மற்றும் வீதிகளில் மின்கம்பங் கள் அமைத்து வீடுகள், நிறுவனங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

நகரின் வளர்ச்சி காரணமாக ரோடுகளை விரிவாக்கம் செய்யும் போது மின்கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டி உள்ளது. அது போல் வீடுகளின் மிக அருகே மின்கம்பிகள் செல்வதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.


எனவே மின்கம்பம் மூலம் வெளியே தெரியும் வகையில் மின்சார கம்பிகள் அமைப்பதற்கு மாற்றாக பூமிக்கடியில் மின்கேபிள்களை பதிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கோவை திருச்சி ரோடு, அவினாசி ரோடு, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் பூமிக்கடியில் மின்கேபிள்கள் (புதைவடம்) அமைக்கப்பட்டு உள்ளன.

மின்கேபிள்களை புதைக்கும் பணி

இந்த நிலையில் கோவையை அடுத்த கவுண்டம்பாளையத்தில் இருந்து இடையர்பாளையம் செல்லும் ரோட்டில் சுமார் ஒரு மீட்டர் தூரத் திற்கு பூமிக்கடியில் மின்கேபிள்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 இதற்காக மின்சார வாரியத்தின் நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று சாலையை தோண்ட ரூ.38 லட்சம் செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அந்த சாலையை தோண்டி மின்கேபிள்கள் பதிக்கும் பணியில் மின்சார வாரியத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கவுண்டம்பாளையத்தில் இருந்து வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய்க்கு மிக அருகிலேயே மின்கேபிள்கள் அமைக்கப்படுவதாகவும், அதனால் குடிநீர் குழாயில் கசிவு, வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை சரி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மின்கசிவால் பாதிப்பு

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது

வடவள்ளி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களுக்கு அருகே மின்கேபிள்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படும் போது சரி செய்ய குழி தோண்டும் மின்கேபிள்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 


எனவே குடிநீர் குழாய் பதித்த இடத்தில் இருந்து இருபுறமும் தலா 2 அடி இடைவெளி விட்டு மின்கேபிள் அமைக்க வேண்டும். 

மேலும் விதிகளில் கூறப்பட்டு உள்ளபடி தரையில் 5 அடி ஆழத்துக்கு கீழே தான் மின்கேபிளை புதைக்க வேண்டும். இந்த பிரச்சினையில்  குடிநீர் வடிகால் வாரியமும், மின்சார வாரியமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பராமரிப்பு செலவு குறையும்

இதுகுறித்து மின் பகிர்மான செயற்பொறியாளர் கூறியதாவது


மாநில நெடுஞ்சாலை துறையினர் குறித்து கொடுத்த இடத்தில் தான் தோண்டி மின்கேபிள் அமைக்கப்படுகிறது. குடிநீர் குழாய்க்கு அருகில் இருப்பதாக தெரிய வந்தால் அதை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

பூமிக்கடியில் மின்கேபிள் அமைப்பதால் சாலை விரிவாக்கம், வீடுகள் பெருக்கம் போன்றவற்றால் பாதிப்புஏற்படாது. பராமரிப்பு செலவும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்