ரூ.1 லட்சம் பசுமாடுகளை கடத்தி விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே ரூ.1 லட்சம் பசுமாடுகளை கடத்தி விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அருகே கூத்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால், நடராஜன் மற்றும் முருகன் ஆகியோருக்கு சொந்தமான 3 மாடுகள் சில நாட்களுக்கு முன்பு கூத்திரம்பாக்கம் பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானது.
இது தொடர்பாக மாட்டின் உரிமையாளர்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த வரதம்மாள் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், சென்னையைச் சேர்ந்த தனோஜ் குமார் என்பவருடன் சேர்ந்து 3 கறவை பசு மாடுகளை லாரியின் மூலம் கடத்தி சென்று வேலூரை சேர்ந்த செல்வராஜிடம் விற்றது தெரியவந்தது.
இதையொட்டி இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் உள்ளிட்ட போலீசார் ஆகியோர் அடங்கிய குழுவினர் வேலூர் விரைந்தனர்.
பின்னர், துரிதமாக செயல்பட்டு, வேலூரில் பதுங்கி இருந்த செல்வத்திடமிருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 3 கறவை பசு மாடுகளை மீட்டு, தனோஜ்குமார் (36), வரதம்மாள் (30), செல்வராஜ் (42) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.