சமூக இடைவெளியுடன் மதுபாட்டில்களை வாங்கி சென்ற மது பிரியர்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியை கடைபிடித்து மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
திருவள்ளூர்,
கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கடந்த 10-ந் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் மது பிரியர்கள் அவதியுற்று வந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு சென்று அங்கிருந்த மதுபாட்டில்களை வாங்கி வந்தும், பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தும் வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு நேற்று முதல் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி அளித்தது. காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகளை திறக்க வேண்டும். அனைவரையும் முக கவசம் அணிந்து வர வலியுறுத்த வேண்டும், கடையைத் திறக்கும் போதும் மூடும் போதும் உட்புறமும் வெளிப்புறமும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், உள்ளிட்ட 18 கட்டுப்பாடுகளையும் விதித்து இருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 137 மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
அப்போது திருவள்ளூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு சமூக இடைவெளியுடன் மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல ஏதுவாக வளையங்கள் வரைந்து அதில் நின்று மதுப்பாட்டில்கள் வாங்கி செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து மது வாங்க வந்த மது பிரியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியை பின்பற்றியும் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். அதேபோல பேரம்பாக்கம் பகுதியில் உள்ள 2 மதுபானக்கடைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மது வாங்க வந்த நபர்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் அனுப்பி வைத்தனர்.
அதேபோல் கடம்பத்தூர், மணவாளநகர், ஒண்டிகுப்பம், மப்பேடு, கீழச்சேரி, திருமழிசை, வெள்ளவேடு, திருப்பாச்சூர், செவ்வாபேட்டை, பெருமாள்பட்டு போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடைகள் முன்பு மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை பெற்றுச் சென்றனர்.