பாலக்கோடு பகுதியில் மாம்பழம் விலை வீழ்ச்சி அரசே விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை
பாலக்கோடு பகுதியில் மாம்பழம் விலை வீழ்ச்சி அரசே விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, அத்துரனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் மாம்பழங்கள் பாலக்கோடு, காரிமங்கலம், வெள்ளிச்சந்தை பகுதிகளில் உள்ள மாங்காய் மண்டிகளுக்கும், மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு சில மாங்கூழ் தொழிற்சாலைகள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன. மண்டிகள் மூடப்பட்டுள்ளதால் மாம்பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பெங்களூரா, அல்போன்சா, பீத்தா், நீலம், பங்கனப்பள்ளி, செந்தூரா உள்ளிட்ட மாங்காய்கள் டன் ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதியில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாம்பழங்கள் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஊரடங்கு காரணமாக மண்டிகள் திறக்காததால் மாம்பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மாங்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் மிக குறைந்த விலைக்கே மாம்பழங்களை கொள்முதல் செய்கின்றன.
மாம்பழத்திற்கு தரத்திற்கு ஏற்ற விலை கிடைக்காததால் மா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசு மாம்பழம் டன் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.