சேலத்தில் விபத்தில் சிக்கிய பெண் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறியதால் பரபரப்பு- உடல் சிதைந்து பலியான பரிதாபம்
சேலத்தில் வாகனம் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் சென்றதால் மூதாட்டி உருவம் தெரியாத அளவுக்கு உடல் நசுங்கி பலியானார்.
சேலம்:
சேலத்தில் வாகனம் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் சென்றதால் மூதாட்டி உருவம் தெரியாத அளவுக்கு உடல் நசுங்கி பலியானார்.
பெண்
சேலத்தை அடுத்த கருப்பூர் கரும்பாலை பஸ் நிலைய பகுதியில், சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை நேற்று முன்தினம் இரவு 65 வயது மூதாட்டி ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சாலையில் விழுந்தார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியதாக தெரிகிறது. அதற்குள் அடுத்தடுத்து வாகனங்கள் மூதாட்டி மீது ஏறி சென்றது.
இதில் மூதாட்டி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இரவு நேரம் என்பதால் மூதாட்டி உடல் கிடப்பது யாருக்கும் தெரியவில்லை. அந்த வழியாக சென்ற வாகனங்கள் வழக்கம் போல் வேகமாக சென்றன.
சோகம்
இதில் மூதாட்டி உடல் உருவம் தெரியாத அளவுக்கு நசுங்கி சாலையோடு சாலையாக ஒட்டி இருந்தது. இதை பார்த்த சிலர், கருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மூதாட்டி உடலை சாலையில் இருந்து எடுத்து பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய மூதாட்டி உடல் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி சென்றதால் உருவம் தெரியாத அளவுக்கு உடல் நசுங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.