அந்தியூர் பகுதியில் திடீர் ஆய்வு: கொரோனா தடுப்பு விதிமுறையை மீறிய ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு சீல்- கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை
அந்தியூர் பகுதியில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் சி.கதிரவன், கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதாக ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் சி.கதிரவன், கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதாக ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
தடுப்பூசி போடும் முகாம்
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ெபாதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் கதிரவன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது டாக்டரிடம் கலெக்டர், பொதுமக்கள் எவ்வாறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்? தேவையான அளவு மருந்துகள் கிடைக்கிறதா? என்பது பற்றி கேட்டறிந்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
பின்னர் கலெக்டர் கதிரவன் அந்தியூர் பேரூராட்சி பகுதி மற்றும் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட புது மேட்டூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி ஆய்வு செய்தார். அப்பொது அதிகாரிகள் மற்றும் டாக்டர்களிடம் அவர் அந்தியூர் பகுதியில் கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின் போது அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன், அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, பேரூராட்சி செயல் அதிகாரி ஹரி ராமமூர்த்தி, சின்னத்தம்பிபாளையம் சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சரவணன், சின்னதம்பிபாளையம் ஊராட்சி செயலர் தேவராஜ், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமாசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நிறுவனத்துக்கு சீல்
மேலும் அந்தியூர் பேரூராட்சி பகுதி தவுட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார். அப்போது அந்த நிறுவனங்கள் பணியாளர்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பணிபுரிந்ததை பார்த்தார்.
இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதாக ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு கலெக்டர் சீல் வைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி முன்னிலையில் ஆயத்த ஆடை நிறுவனத்தை பூட்டி வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
அப்போது அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி ஹரி ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.