சட்டவிரோதமாக மது விற்றால் குண்டர் சட்டத்தில் கைது- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டாஸ்மாக் கடை திறப்பு
கொரோனா பரவல் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அங்கு நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து வாகனங்களில் மது கடத்தி வருதலும், சாராயம் காய்ச்சுவதும் அதிகரித்து இருந்தது. இதில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவட்ட போலீஸ் துறை சார்பில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து பல ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள், சாராயம், சாராய ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழித்துள்ளனர். எனவே ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை, மது கடத்தல் போன்றவற்றை தடுக்க மாநில, மாவட்ட எல்லைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குண்டர் சட்டத்தில் கைது
இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மற்றும் தடை செய்யப்பட்ட மது வகைகளின் விற்பனையை தடுக்கும் வகையில் கடந்த சில தினங்களாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ராயர்பாளையத்தில் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் பேரில் அங்கு தீவிர ரோந்து மேற்கொண்டு 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் கர்நாடகா மாநில எல்லைப்பகுதியில் கூடுதலாக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகளில் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வந்த வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களில் மது கடத்தி வந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தொடர்ந்து மது கடத்தல், மது விற்பனையில் ஈடுபடுபவர்கள், அதிக அளவில் வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்துள்ளவர்கள், ஏற்கனவே இதே குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து உடனடியாக போலீஸ் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அப்படி தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.