ஒரே நாளில் 11,564 பேருக்கு தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் தட்டுப்பாடு காரணமாக தினமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை உள்ளது. அவ்வப்போது வரும் தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள் மூலமாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 8 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 4,100 கோவேக்சின் தடுப்பூசியும் குமரி மாவட்டம் வந்தது. இந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக நாகர்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாம்களில் நேற்று காலை 8 மணி முதல் தடுப்பூசி போடும் பணி நடந்தது. பெரும்பாலான முகாம்களில் காலை 8 மணிக்கு முன்னதாகவே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
4 இடங்களில் முகாம்
நாகர்கோவிலை பொருத்த வரை 4 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. அதாவது இந்து கல்லூரி, டதி பள்ளி, அலோசியஸ் பள்ளி, டி.வி.டி. பள்ளி ஆகிய 4 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இங்கு காலை 7 மணிக்கே பொதுமக்கள் வரத்தொடங்கினர். பின்னர் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுபோல் புத்தேரி அரசு பள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டது.அந்த வகையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 11 ஆயிரத்து 564 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக தடுப்பூசி முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு உடல்வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.