வாகன வசதி இல்லாததால் தடுப்பூசி போட முடியாமல் தவிப்பு
மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர்களுக்கு நடந்த சிறப்பு முகாமில் வாகன வசதி இல்லாததால் தடுப்பூசி போடமுடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் 2 நாட்களில் 968 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டனர்.
பொள்ளாச்சி
மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர்களுக்கு நடந்த சிறப்பு முகாமில் வாகன வசதி இல்லாததால் தடுப்பூசி போடமுடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் 2 நாட்களில் 968 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டனர்.
மாற்றுத்திறனாளிகள்
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடப் பட்டு வருகிறது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.
பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி, கோமங்கலம்புதூர் நெகமம், புரவிபாளையம், மண்ணூர் தேவசந்தூர், ஆனைமலை, கோட்டூர், வால்பாறை, ரொட்டிக் கடை, சோலையார் அணை, கிணத்துக்கடவு, வடசித்தூர், காளியண்ணன் புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
968 பேருக்கு தடுப்பூசி
முகாமில் தெற்கு ஒன்றியத்தில் 370 பேர், வடக்கில் 261 பேர், கிணத்துக் கடவில் 166 பேர், வால்பாறையில் 100 பேர், ஆனைமலையில் 71 பேர் என்று மொத்தம் 968 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
சிறப்பு முகாம் தொடர்பாக அந்தந்த வட்டார வளமைய அதிகாரிகள் செல்போன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பெரும்பாலோனார் தடுப்பூசி போடுவதற்கு வரவில்லை.
வாகன வசதி இல்லை
ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து இல்லை. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், கிராமங்களில் இருந்து வாடகைக்கு ஆட்டோ, கார் பிடித்து தடுப்பூசி போடுவதற்கு வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
எனவே சிறப்பு முகாம்கள் நடக்கும் போது அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தடுப்பூசி குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.