இ பதிவு பெற்று வாடகை கார் ஆட்டோக்கள் ஓடின
பொள்ளாச்சியில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப் பட்டதையடுத்து இ-பதிவு பெற்று வாடகை கார், ஆட்டோக்கள் ஓடின.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப் பட்டதையடுத்து இ-பதிவு பெற்று வாடகை கார், ஆட்டோக்கள் ஓடின.
ஊரடங்கில் தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதி முழுஊரடங்கு அமல்படுத்தப் பட்டது.
பின்னர் பாதிப்பு குறைய தொடங்கியது. இதையடுத்து கடந்த 7-ந்தேதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டன. இதை தொடர்ந்து மேலும் சில தளர்களுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து பொள்ளாச்சி பகுதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் ஒர்க் ஷாப்புகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட்டன.
கார்-ஆட்டோக்கள் ஓடின
வாடகை கார், ஆட்டோக்களில் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப் பட்டனர். இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
நியூஸ்கீம் ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோன்று ஆனைமலை, கோட்டூர் பகுதிகளிலும் வாகன போக்குவரத்து அதிகரித்து இருந்தது.
இதற்கிடையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்கள் செல்கிறதா? என்று போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணித்தனர்.
அப்போது இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
அபராதம் விதிப்பு
மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலைகளில் சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தான் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து உள்ளது.
எனவே வீட்டை விட்டு வெளியே வரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் ஊரடங்கு அமலில் தான் உள்ளது.
எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.