நாமக்கல்லில் ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்கின-போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
நாமக்கல்லில் ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்கின. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் மருந்து கடைகளை தவிர அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டன. இதே நிலை தான் கடந்த 6-ந் தேதி வரை நீடித்தது. 7-ந் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டன.
அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்ததால், வணிகர் சங்கத்தினர் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறப்பது என முடிவு செய்து அதன்படி செயல்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று முதல் தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அனுமதித்து உள்ளது. அதன்படி இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், வேளாண் உபகரணங்கள் மற்றும் பம்புசெட் பழுதுநீக்கும் கடைகள், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் ஆகியவை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் திறந்து இருந்தன.
மேலும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்கள் இ-பதிவுடன் இயங்க தொடங்கின. இதனால் நாமக்கல் நகரில் வழக்கத்தை காட்டிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.