2-ம் போக நெல் விளைச்சல் அமோகம்

43 ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-ம் போக நெல் விளைச்சல் அமோகமாக உள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2021-06-14 18:10 GMT
கீழக்கரை, ஜூன்.
43 ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-ம் போக நெல் விளைச்சல் அமோகமாக உள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மழைநீர் சேமிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கழநீர்மங்கலம், பொட்டல் பச்சேரி, ஆண்டிச்சிக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் கண்மாய், குளம், பண்ணைக்குட்டைகளில் தண்ணீர் நன்றாக தேங்கியுள்ளது.
ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த மழைநீரை சேமித்து வைத்ததால் தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் வற்றாமல் தேங்கியுள்ளது. இதனால் வறட்சி மிகுந்த இப்பகுதியில் 43 ஆண்டுகளுக்கு பிறகு 2-ம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கருக்கு 40 மூடைகள் வரை நெல் சாகுபடி பெற இயலும். இப்பகுதியில் 900 ஏக்கர் வரை நெல் பயிரிடப்பட்டு சாகுபடி செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கால்வாயை தூர்வார வேண்டும்
இது குறித்து சிக்கலைச் சேர்ந்த விவசாயி பாக்கியநாதன் கூறியதாவது:- 
இனி வரும் காலங்களில் இது போன்று கண்மாயில் நீரை அதிக அளவில் தேக்கி வைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம். சிக்கல் பாசன கண்மாய்க்கு வரும் ரெகுநாதபுகாவேரி கால்வாயை முழுமையாக தூர்வாரி மராமத்து செய்ய வேண்டும். காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை சீரமைத்து அனைத்து கண்மாய்க்கும் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையம்
மேலும் விளைந்த நெல்கள் தனியார் நெல் கொள்முதல் நிலையங்களில் கிலோ ரூ.12-க்கும், அரசு கொள்முதல் நிலையத்தில் ரூ.19.58-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 2-ம் போகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்களை கொள்முதல் செய்வதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் சிக்கல் பகுதியில் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துதர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்