அரிச்சந்திரபுரம் கடைவீதி சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கியது
தினத்தந்தி செய்தி காரணமாக அரிச்சந்திரபுரம் கடைவீதி சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கியது.
கூத்தாநல்லூர்;
தினத்தந்தி செய்தி காரணமாக அரிச்சந்திரபுரம் கடைவீதி சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கியது.
தடுப்பு சுவர் இடிந்தது
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரத்தில் கடைவீதி சாலை உள்ளது. இந்த சாலை இடையே உச்சுவாடி செல்லும் வளைவு சாலை உள்ளது. இந்த வளைவு சாலை வழியாக உச்சுவாடி நேதாஜி தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, ஒற்றை தெரு, இரட்டை தெரு, மாரியம்மன் கோவில் தெரு, தாமரைக்குளம் தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு மற்றும் பெரிய கொத்தூர் ராமநாதபுரம், போன்ற ஊர்களுக்கு அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் உச்சுவாடி வளைவு சாலையில் உள்ள அரிச்சந்திரபுரம் பாசன வாய்க்கால் மதகு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், கடைவீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் வளைவில் திரும்பும் வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் சென்று வந்தன.
கட்டுமான பணி
மேலும் பாசன வாய்க்கால் தடுப்பு இடிந்து விழுந்ததால் வாய்க்கால் இருப்பது தெரியாமல் அந்த வழியாக செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைவதாக அப்பகுதி மக்கள் கூறினர். மேலும், எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் கூறினர். எனவே, சேதமடைந்த பாசன வாய்க்கால் குழாய்கள் அகற்றப்பட்டு சிறிய பாலம் மற்றும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது அரிச்சந்திரபுரம் கடைவீதி சாலையின் குறுக்கே பாலம் மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாலம் கட்ட நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இது குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.