காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி

இளையான்குடி அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி நடந்தது. இதை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர்.

Update: 2021-06-14 17:59 GMT
திருப்பத்தூர்,

இளையான்குடி அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி நடந்தது. இதை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர்.

குழாய் பழுது

காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டதால் சரிவர குடிநீர் வினியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். குடிநீர் தட்டுப்பாட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி பழுதான குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணி நடந்தது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே என்.புதூர் ஊராட்சியில் பழுதான குடிநீர் குழாய் சீரமைப்பு பணி நடந்தது.

அமைச்சர்கள் பார்வையிட்டனர்

இந்த பணியை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர். அப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் என்.புதூர் மற்றும் நீரேற்று நிலையம் அமைந்துள்ள டி.புதூர், திருப்பத்தூர் நகர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து தாயமங்கலம் வழியாக செல்லும் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு அமைச்சர் கே.என்.நேரு கூறும் போது, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழுதான குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், முன்னாள் எம்.எல்.ஏ.சுப.மதியரசன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர்கள் பள்ளத்தூர் ரவி, நாராயணன், ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், நகர செயலாளர் நஜீமுதீன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் மணிமோகன், மேற்பார்வை பொறியாளர்கள் குணசேகரன், முத்தையா, செயற்பொறியாளர் அய்யணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், பேரூராட்சி துறை உதவி இயக்குனர் மாடசாமி, உதவி மேற்பார்வை பொறியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வீட்டுக்கு சென்ற அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், மெய்யநாதன் ஆகியோர் அவரது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்