கோவில்பட்டி டாஸ்மாக் கடையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவில்பட்டி டாஸ்மாக் கடையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ரூ.1.16 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் இருப்பு குறைவு கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2021-06-14 17:23 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி மெயின் ரோடு பால்பாண்டியன்பேட்டையில் டாஸ்மாக் கடை உள்ளது. முழு ஊரடங்கு நேரத்தில் இந்த கடையில் இருந்து ஊழியர்கள் மதுபாட்டில்களை எடுத்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.  இந்த நிலையில் கலால் துணை ஆணையர் செல்வநாயகம் உத்தரவின் பேரில், கோவில்பட்டி கோட்ட கலால் தாசில்தார் மல்லிகா, வருவாய் ஆய்வாளர் பாலு, டாஸ்மாக் மண்டல தணிக்கையாளர் ராதாகிருஷ்ணன், உதவி தணிக்கையாளர் ஹரிகரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று காலை அந்த கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 3 மணி நேரத்துக்கும் தணிக்கை நடந்தது. அதில் கடந்த மே மாதம் 9-ந்தேதி டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டபோது இருந்த மதுபாட்டில்கள் இருப்பை ஒப்பிடும்போது, தற்போது ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 830 மதிப்பிலான மதுபாட்டில்கள் இருப்பு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடையில் இருந்த மேற்பார்வையாளர் வேணு கோபால்சாமி, விற்பனையாளர்கள் கதிர்வேல், அருணாசலம், உதவி விற்பனையாளர்கள் கணேசன், லெனின், சாமிதாஸ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது ஊழியர்கள், முழு ஊரடங்கு அறிவிப்புக்கு முன்பு மாலை 5 மணி முதல் 6 மணி வரை மது விற்பனை செய்யப்பட்ட பணத்தை வைத்திருந்ததாகவும், மறுநாள் முதல் ஊரடங்கு என்பதால் அந்த பணத்தை வங்கியில் செலுத்த முடியவில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணை அறிக்கையை மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மண்டல மேலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்