குமரலிங்கம் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

குமரலிங்கம் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.;

Update: 2021-06-14 17:15 GMT
போடிப்பட்டி,:
குமரலிங்கம் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
ஆண்டுக்கு இரு முறை
குமரலிங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா தொற்று பலருடைய வாழ்வாதாரத்தைப் புரட்டிப்போட்டது போல மா விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
குமரலிங்கம் பகுதியில் அதிக அளவில் மா சாகுபடி நடைபெறுகிறது. இதில் பல விவசாயிகள் குத்தகை அடிப்படையில் ஆண்டுதோறும் பல லட்சம் செலுத்தி மாமரங்களைப் பராமரித்து அதில் கிடைக்கும் பழங்கள் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பருவம் தவறிப் பெய்த மழையால் மாமரங்களில் மகசூல் குறைந்துள்ளது. 
மேலும் தளர்வுகளற்ற ஊரடங்கின் போது பெருமளவு பழங்கள் பழுத்து வீணாகின. நீலா, நடுச்சாளை, கிளிமூக்கு உள்ளிட்ட ஒரு சில ரகங்கள் ஆண்டுக்கு 2 முறை காய்க்கும். ஒருசில ரகங்கள் மே, ஜூன் மாதங்களில் காய்க்காவிட்டால் அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு காய்க்கும். அப்போது நல்ல விலை கிடைக்கும். ஆனால் தற்போது அனைத்து ரகங்களும் ஒரே நேரத்தில் காய்த்து விட்டன.
நுகர்வு குறைவு
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் வெளிநாட்டுக்கு பழங்கள் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் அதிக அளவில் வராததால் மாம்பழங்கள் பெருமளவு வீணாகும் நிலை உள்ளது. பொதுவாகவே தொடர் ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசியப்பயன்பாட்டுக்கு மட்டுமே செலவு செய்யும் சூழல் உள்ளது.
இதனால் மாம்பழங்கள் நுகர்வு குறைந்து விற்பனையில் மந்த நிலை நீடிக்கிறது. நன்கு விளைந்த மாங்காய்களைப் பறித்து எந்தவிதமான ரசாயனக் கலப்பும் இல்லாமல் முழுக்க முழுக்க இயற்கையாகவே பழுக்க வைத்து விற்பனை செய்கிறோம். இவ்வாறு பழுக்க வைப்பதற்கு சுமார் ஒரு வார காலம் பிடிக்கிறது. ஆனாலும் சுவை அதிகமாக இருப்பதுடன் வயிறு மற்றும் உடலுக்கு எந்த விதமான தீங்கும் விளைவிக்காது. இதனால் பொதுமக்கள் மாந்தோப்புகளுக்கே தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள். இதனால் சில்லறை விற்பனை ஓரளவு கைகொடுக்கிறது. ஆனாலும் தோப்புக்களை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் முழு தொகையையும் கட்டியாக வேண்டும். எனவே இந்த ஆண்டில் பொருளாதார ரீதியாக பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
மா ரகங்கள்
நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரா, ஹிமாயூதின், காலேபாடு, ருமானி, மல்கோவா, பையூர், அல்போன்சா, சிந்து என்று மாம்பழங்களில் பலவகை உள்ளது. குமரலிங்கம் பகுதியில் விளையும் மாம்பழங்களில் அல்போன்சா ரகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. செந்தூரா, கிளிமூக்கு, நீலம் போன்ற ரக மாம்பழங்கள் ஜூஸ் தயாரிப்புக்கு பயன்படுகிறது. இதுதவிர கத்தாமணி எனப்படும் ரக மாங்காய் ஊறுகாய் தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

மேலும் செய்திகள்