புதிய உச்சத்தை தொட்டது குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனையானது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர்,
பொதுத்துறையைச் சேர்ந்த பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆரம்பத்தில இருந்தே பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 முறைக்கும் மேல் பெட்ரோல், டீசல் விலை மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது கடலூர் மாவட்டம் குமராட்சியில் நேற்று முன்தினம் 99.83 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல், 27 காசுகள் உயர்ந்து நேற்று 100.1 ரூபாய்க்கு விற்பனையானது. 93.79 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல், 28 காசுகள் உயர்ந்து 94.07 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோல் கடலூரில் நேற்று பெட்ரோல் 99.64 ரூபாய்க்கும், டீசல் 93.79 ரூபாய்க்கும் வினியோகம் செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.