டீக்கடைகள், சலூன்கள், அழகுநிலையங்கள் திறப்பு

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் டீக்கடைகள், சலூன்கள், அழகுநிலையங்கள் உள்பட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

Update: 2021-06-14 17:00 GMT
விழுப்புரம், 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடகை அமல்படுத்தியது. இதையடுத்து கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியதையடுத்து ஊரடங்கிலும் தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று குறையாத மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதையொட்டி கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

டீக்கடைகள், சலூன்கள் திறப்பு

இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகள், அழகு நிலையங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இந்த கடைகள் அரசு விதித்த நிபந்தனைகளின்படி குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடனும் இயங்கின.
அதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டீக்கடைகளும் திறக்கப்பட்டன. ஆனால் அரசு வழிமுறைகளின்படி டீக்கடைகளில் பார்சல் முறைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. 

மேலும் பல்வேறு கடைகள்

இதுதவிர  எலக்ட்ரிக்கல்ஸ், ஹார்டுவேர்ஸ், நோட்டு, புத்தகம் விற்பனை, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் விற்பனை, இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகள், வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுதுநீக்கும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டன. மேலும் தொழிற்சாலைகள்,  தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கின. அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களை திறக்க நடைபயிற்சிக்காக மட்டும் திறக்கப்பட்டன.

மக்கள் கூட்டம் அதிகரிப்பு

மேற்கண்ட கூடுதல் தளர்வுகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள், கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் பலரும் கொரோனா தடுப்பு வழிகாட்டு முறைகளை மீறி சாலையில் சுற்றிதிரிந்தனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்