மதுபிரியர்களின் கூட்டம் குறைவால் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடின

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு வழிமுறைகளுடன் 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மதுபாட்டில்கள் விற்பனை தொடங்கியது. ஆனால் மதுபிரியர்களின் கூட்டம் குறைவால் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2021-06-14 16:49 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கினால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள், மதுபானங்களை அருந்த முடியாமல் திக்குமுக்காடினர். டாஸ்மாக்கடைகளை திறப்பதற்கான அறிவிப்பு எப்போது வரும்? என்று அவர்கள் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இந்நிலையில் நோய் பரவல் கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட பகுதியை தவிர மற்ற பகுதியில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்குவதற்கு அரசு அனுமதியளித்து உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 35 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு அரசின் பாதுகாப்பு வழிமுறைகளுடன் மதுபாட்டில்கள் விற்பனை தொடங்கியது.

கூட்டம் குறைவு

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 124 டாஸ்மாக் கடைகளும் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
வழக்கமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக 1, 2 மணி நேரத்திற்கு முன்பாகவே மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலை 10 மணிக்கு கடைகளை திறந்த பிறகும் மதுபிரியர்களின் கூட்டம் வரவில்லை.
 யாரும் எதிர்பாராத வகையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் நேற்று மதுபானங்களை வாங்க மதுபிரியர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. 

மதுபாட்டில்கள் விற்பனை சரிவு

இதனால் அந்த கடைகளும், கடைகளை சார்ந்த பகுதிகளும் வெறிச்சோடிய நிலையில் காட்சியளித்தது. ஒரு சில கிராமப்புறங்களில் உள்ள கடைகளில்தான் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. 
விழுப்புரம் மாவட்டத்தில்  கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு தளர்வின்போது 2 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் ரூ.5¾ கோடிக்கு மது விற்பனை நடந்தது.
தற்போது 35 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மது விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரும்பாலான கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் குறைவாக இருந்ததால் மது விற்பனை சரிந்துள்ளது.

புதுச்சேரிக்கு படையெடுத்த மதுபிரியர்கள்

 ஏனெனில் கடந்த 8-ந் தேதி முதல் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மதுபிரியர்கள் இங்கிருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு படையெடுத்துச்சென்று அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரம், 10 நாட்களுக்கு தேவையான மதுபான வகைகளை மொத்தம், மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து விட்டதாகவும், இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் மது விற்பனை சற்று சரிந்துள்ளதாகவும் டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

கள்ளக்குறிச்சி

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அனைத்து மதுக்கடைகளிலும் பீர் மட்டுமே இருந்தது. பிராந்தி வகை மதுபானங்கள் மிக குறைந்த அளவே இருந்தது. அதிலும் ரூ.120 முதல் 220 என்ற குறைந்த விலையில் உள்ள மதுபானங்கள் இல்லை. ரூ.250-க்கும் மேல் உள்ள உயர்ந்த வகை மதுபானங்கள் மட்டுமே இருந்தது. இதனால் 2 குவாட்டர் பாட்டிலை வாங்கிச் செல்லலாம் என்று வந்தவர்கள் ஒரு குவாட்டர் பாட்டிலை வாங்கிச் சென்றனர். நேற்று முதல்நாள் என்பதால் குறைந்த அளவில் இருப்பு இருந்தாலும் இந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களும் மதியம் 2 மணிக்குள் விற்று தீர்ந்து விட்டது. இதனால் ஏராளமான மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்