8 மாத பெண் குழந்தை உள்பட 9 பேர் உயிரை குடித்த கொரோனா
தேனி மாவட்டத்தில் 8 மாத பெண் குழந்தை உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.;
தேனி:
8 மாத குழந்தை பலி
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் இந்த வைரஸ் பலரின் உயிரை குடித்து வருகிறது.
இந்நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இதில், க.புதுப்பட்டியை சேர்ந்த 8 மாத பெண் குழந்தையும் பலியானது. சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புடன் அந்த குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
நேற்று காலையில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அதுபோல், மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த 39 வயது ஆண், கண்டமனூர் பகுதியை சேர்ந்த 40 வயது ஆண், ஆண்டிப்பட்டியை சேர்ந்த 53 வயது ஆண், பண்ணைப்புரத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி, போடி பகுதியை சேர்ந்த 55 வயது பெண், பெரியகுளம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, கம்பம் பகுதியை சேர்ந்த 58 வயது பெண், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த 67 வயது முதியவர் ஆகியோரும் கொரோனாவுக்கு பலியாகினர்.
171 பேருக்கு தொற்று
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனால், மாவட்டத்தில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 911 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 290 பேர் நேற்று குணமாகினர்.
இந்த வைரஸ் பாதிப்புடன் 1,668 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். அவர்களில், 116 பேர் செயற்கை ஆக்சிஜன் சுவாசத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.