உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

Update: 2021-06-14 16:27 GMT
உடுமலை
தமிழ்நாட்டில் உள்ள இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, கோவில்களில் பணியாற்றும் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீ தடுப்பு பயிற்சி பெற வேண்டும் என்று அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
இதைத்தொடர்ந்து உடுமலை தாலுகாவில் உள்ள மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், சோமவாரபட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவில், மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர்கோவில், கொழுமம் தாண்டவேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் தீ தடுப்பு உபகரணங்கள் அவசர தேவைக்கு ஏற்ப உள்ளதா? என்று உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஹரிராமகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு, உபகரணங்கள் இருப்பது குறித்து சான்று வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டால் தீ தடுப்பு உபகரணங்களைக்கொண்டு தீயை அணைப்பது எப்படி? என்பது குறித்து கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் இந்த கோவில் பணியாளர்களுக்கு, ஒத்திகை பயிற்சி உடுமலை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை ஒத்திகை பயிற்சியளித்தனர். இதில் கோவில் செயல் அலுவலர்கள் வி.பி.சீனிவாசன், சீனிவாச சம்பத், பவானி, நாகைய்யா, அம்சவேணி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக இவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

மேலும் செய்திகள்