ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் 22 பவுன் நகைகள்-பணம் கொள்ளை

தேனி அருகே ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 22 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2021-06-14 16:03 GMT
தேனி: 


ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி
தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி சவுடாம்பிகா நகரில் வசிப்பவர் பாரதி (வயது 72). 

இவர் போலீஸ் துறையின் தொழில்நுட்ப பிரிவில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் மனைவி ஜோதிமணியுடன் வசித்து வருகிறார். வீட்டின் முதல் மாடியை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் வேறு ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவில் பாரதி தனது மனைவியுடன் வீட்டின் ஒரு அறையில் தூங்கினார். மற்றொரு அறையை வெளிப்புறமாக பூட்டி இருந்தார். நேற்று காலையில் எழுந்தவுடன் பூட்டி இருந்த அறையை திறந்த போது ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

நகை-பணம் கொள்ளை
அந்த அறையில் பீரோவில் இருந்த பொருட்கள்  சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்து இருந்த 22 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது. மர்ம நபர்கள் ஜன்னலில் உள்ள சில கம்பிகளை அறுத்தும், நெம்பியும் உள்ளே நுழைந்தனர். 

பீரோ பூட்டப்படாமல் இருந்ததால், அதனை திறந்து இந்த துணிகர கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு பாரதி தகவல் கொடுத்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவும் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக கண்டுபிடித்து கைது செய்ய போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார்.

மோப்ப நாய்
கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து வீட்டின் கதவு, பீரோ, ஜன்னல் உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. 

அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி வீட்டைவிட்டு வெளியே ஓடியது. கொடுவிலார்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை வரை  ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து பாரதி கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்