உடுமலையில் இந்துமக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உடுமலையில் இந்துமக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உடுமலை
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக டாஸ்மாக் கடைகள் கடந்த மாதம் (மே) 24-ந் தேதி முதல் அடைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முழு ஊரடங்கு நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில், முழு ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் 21-ந்தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வின்படி 27 மாவட்டங்களில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் வருமானம் இல்லாமல் மிகவும் சிரமத்தில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடை திறப்பால், பல குடும்பங்கள் சீரழியக்கூடிய நிலை உருவாகும் என்பதால் டாஸ்மாக் கடை திறப்பு திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்தும் உடுமலை குட்டைத்திடலில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பு இந்து சாம்ராஜ்யம் மற்றும் இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் இந்து சாம்ராஜ்யம் நிறுவனத்தலைவர் சக்திவேல், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ரமணன் மற்றும் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.