வேலூர் மாவட்டத்தில் சலூன், டீக்கடைகள், அழகு நிலையங்கள் திறப்பு
சலூன், டீக்கடைகள், அழகு நிலையங்கள் திறப்பு
வேலூர்
கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 10-ந் தேதி தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி சலூன், டீக்கடைகள், அழகு நிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டது. தற்போது வேலூர் உள்பட 27 மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது. அதனால் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வாக நேற்று முதல் சலூன், டீக்கடைகள், அழகுநிலையங்கள் நேரக்கட்டுபாட்டுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் சுமார் ஒரு மாதங்களுக்கு பின்னர் நேற்று காலை 6 மணிக்கு டீக்கடைகள் திறக்கப்பட்டன. காலை வேளையில் பலர் டீ வாங்க கடைகளுக்கு சென்றனர். டீக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது.
இதேபோன்று ஆண்கள் பலர் காலையிலேயே சலூன் கடைகளுக்கு படையெடுத்தனர். சலூன் கடைகளில் ஒரேநேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு முடி வெட்டுதல், தாடி அகற்றம் செய்யப்பட்டது. பல பெண்கள் அழகுநிலையங்களுக்கு சென்று முகம், சிகை அலங்காரம் செய்து தங்களை அழகுப்படுத்தி கொண்டனர்.
சலூன், டீக்கடைகள், அழகுநிலையங்களில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்று சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.