சலூன், டீக்கடைகள் திறந்ததால் மக்கள் உற்சாகம்
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால் சலூன், டீக்கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டதால் மக்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும் அதிகாலையில் மக்கள் நடைபயிற்சி சென்றனர்.
திண்டுக்கல்:
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வால் சலூன், டீக்கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டதால் மக்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும் அதிகாலையில் மக்கள் நடைபயிற்சி சென்றனர்.
கட்டுப்பாடுகள் தளர்வு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவின் 2-வது அலை பரவத்தொடங்கியது. அதுவே மே மாதம் உச்சத்தை தொட்டது. எனவே, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 10-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மளிகை, காய்கறி, மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டன.
ஆனால் சலூன், அழகுநிலையம், டீக்கடைகள் உள்பட இதர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதிலும் டீக்கடைகள், சலூன் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
டீ, சலூன் கடைகள்
இந்த தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று டீக்கடைகள் திறக்கப்பட்டன. ஒரு மாதத்துக்கும் மேலாக மூடிக்கிடந்த டீக்கடைகளை திறந்ததால் மக்கள் காலையிலேயே டீக்கடைக்கு வந்தனர். அதேநேரம் பார்சலில் மட்டுமே டீ, காபி வழங்கப்பட்டன.
அதேபோல் சலூன் கடைகளும் ஒரு மாதத்துக்கு மேலாக அடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் திருமுடித்தம், சவரம் செய்ய முடியாமல் பலர் சிரமப்பட்டனர். ஒருசிலர் சொந்தமாக சவரம் செய்தாலும், முடிதிருத்தம் செய்ய வாய்ப்பு இல்லாமல் தவித்தனர்.
இந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் சலூன் கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சலூன் கடைகளுக்கு வந்து முடிதிருத்தம் செய்தனர். அதேபோல் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டதால், பெண்கள் உற்சாகத்தில் அழகு நிலையத்துக்கு சென்றனர்.
மிக்சி, கிரைண்டர் பழுதுநீக்குதல்
இதுதவிர கட்டுமான பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், செல்போன் மற்றும் மண்பாண்டம் விற்பனைக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் நடந்தது. மேலும் வேளாண் உபகரணங்கள், மிக்சி மற்றும் கிரைண்டர், கண் கண்ணாடி, செல்போன் பழுதுநீக்கும் கடைகள் திறக்கப்பட்டன.
இதனால் ஊரடங்கு காலத்தில் பழுதாகி சரிசெய்யப்படாமல் வீட்டில் கிடந்த மிக்சி, கிரைண்டர், கியாஸ் அடுப்பு உள்ளிட்டவற்றை பழுதுநீக்குவதற்கு மக்கள் கடைகளுக்கு கொண்டு சென்றனர். திண்டுக்கல்லில் நேற்று அனைத்து பழுதுநீக்கும் கடைகளிலும் மக்கள் பழுதான மிக்சி, கிரைண்டருடன் குவிந்தனர்.
அதிகாலையில் நடைபயிற்சி
மேலும் அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் விளையாட்டு மைதானங்களும் நேற்று திறக்கப்பட்டன. இவை கடந்த ஒரு மாதமாக மூடிக்கிடந்ததால் விளையாட்டு பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பலரும் சிரமப்பட்டனர். நேற்று அவை திறக்கப்பட்டதால் அதிகாலையிலேயே மக்கள் உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் ஒய்.எம்.ஆர்.பட்டி குளம், கோபாலசமுத்திரக்குளம், நத்தம் சாலை குளம் ஆகியவற்றில் ஏராளமான மக்கள் நடைபயிற்சி சென்றது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.