கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து ஜீப் டிரைவர் தற்கொலை; உருக்கமான வீடியோ பதிவு சிக்கியது

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து ஜீப் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-14 15:05 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து ஜீப் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஜீப் டிரைவர்
கொடைக்கானல் நாயுடுபுரம், அண்ணா ராமசாமி நகரை சேர்ந்தவர் ஜெசீந்திரன் (வயது 44). ஜீப் டிரைவரான இவர் கொடைக்கானல் பகுதியில் ஜீப் மூலம் தண்டோரா அறிவிக்கும் பணியை செய்து வந்தார். இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ஜெசீந்திரன் ஜீப்பில் வெளியே சென்றார். இதற்கிடையே சிறிது நேரத்தில் விழித்தெழுந்த அவரது மனைவி வேளாங்கண்ணி, கணவரை தேடியுள்ளார். 
அப்போது அவர் இருந்த அறையில் செல்போன் மட்டும் இருந்தது. இதையடுத்து அந்த செல்போனை எடுத்து வேளாங்கண்ணி பார்த்தார். அதில் வீடியோ ஒன்றை ஜெசீந்திரன் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், தான் மனஉளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் ஜெசீந்திரன் தெரிவித்திருந்தார். மேலும் தனது இந்த முடிவுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் என்று யாரும் காரணம் இல்லை என்றும், எனது மனைவி, மகன், மகளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் உருக்கமாக பேசியிருந்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த வேளாங்கண்ணி, உறவினர்களுடன் சேர்ந்து தனது கணவரை பல்வேறு இடங்களில் தேடினார். 
ஏரியில் குதித்து தற்கொலை
இதற்கிடையே ஏரிச்சாலையில் 40 வயது மதிக்கத்தக்க நபர் பிணமாக மிதப்பதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படைவீரர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று, ஏரிச்சாலையில் மிதந்த உடலை மீட்டனர். 
பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், பிணமாக மிதந்தவர் ஜெசீந்திரன் என்பதும், ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
நட்சத்திர ஏரியில் குதித்து ஜீப் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்