மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்தி வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்தி வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் லலிதா தெரிவித்து உள்ளார்.

Update: 2021-06-14 12:20 GMT
மயிலாடுதுறை,

கொரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவிவரும் இந்த சமயத்தில் தொற்றை கட்டுப்படுத்த முழுஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் நுண்நிதி நிறுவனங்கள் மூலம் மகளிர் குழுக்கள் பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்துதலில் கண்டிப்பு காட்டக்கூடாது என்றும், கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை மீறி எந்தவொரு சிறு நிதி வங்கிகள் தங்கள் நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவி் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப செலுத்த நிர்பந்தப்படுத்தியோ அல்லது கட்டாயப்படுத்தியோ வசூல் செய்திடும் தகவல் தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

புகார் தெரிவிக்கலாம்

மேலும், மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு சிறு நிதி வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் மீது ஏதேனும் புகார்கள் வரும் பட்சத்தில் அவர்களுடைய நிறுவனம் வழங்கிய கடன் அட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிறுவன தலைமையக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகாரினை தெரிவிக்கலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் நிறுவன பணியாளர்கள் விவரத்தினை குறித்து கொண்டு 18001021080 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் திங்கள் முதல் சனி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்பு கொண்டு புகாரினை தெரிவிக்கலாம். இதில் தீர்வு கிடைக்கவில்லை எனில் ரிசர்வ் வங்கியின் நுண்நிதி நிறுவனங்களுக்கான தீர்ப்பாயத்தில் 044 - 25395964 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்