வட சென்னையை கலக்கிய பிரபல ரவுடி கைது

வட சென்னையை கலக்கிய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-06-14 05:57 GMT
பெரம்பூர், 

சென்னை பிராட்வே பி.ஆர். கார்டன் பகுதியை சேர்ந்தவர் காக்கா தோப்பு பாலாஜி (வயது 38). வட சென்னை பகுதியை கலக்கிய பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி, கொள்ளை என பல்வேறு வழக்குகள் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பூக்கடை, முத்தியால்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ளது. இவர் மீது 5 முறைக்கு மேல் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த காக்கா தோப்பு பாலாஜி, கடந்த மாதம் ஜாமீனில் வெளி வந்ததாக தெரிகிறது. அதன்பிறகு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். நேற்று அவரை ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் ரவுடி காக்காதோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் கூறியதாவது:-

ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை சென்னையில் ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்துள்ளார்கள். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் பட்டாகத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடியபோது காயம் அடைந்துள்ளார். அவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 52 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சென்னையில் தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்படுகிறார்கள். இன்னும் ஒரு வாரத்திற்குள் மேலும் பதினைந்து, பதினாறு ரவுடிகள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்