‘திருவள்ளூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உள்ளது’ டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு, திருவள்ளூர் மாவட்டத்தில் 3 பேருக்கு மட்டுமே கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக 80 படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.இதனை நேற்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால், நோய் பரவல் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலும் நோய்தொற்று குறைந்து வருகிறது. பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை முழுமையாக வழங்கி தளர்வுகளுடன் உள்ள ஊரடங்கில் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். கூட்டங்களை தவிர்த்து, அனைவரும் முக கவசம் அணிந்து கவனமாக இருக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து நடந்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
தமிழகத்தில் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நபர்களுக்கு மட்டுமே கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் ஆயிரத்து 448 நபர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று உள்ளது. அதை தடுக்க 9,520 தடுப்பு மருந்துகளும் வர பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் மூன்றாவது அலையை தடுக்க வேண்டுமானால் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தொற்று குறைந்துவிட்டது என்று முக கவசம் அணியாமல் அலட்சியமாக இருக்கக்கூடாது. மாநிலத்தில் 2,100 டாக்டர்கள் 6,000 நர்சுகள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு நோய்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 628 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், உதவி பொறியாளர் சோமசுந்தர், மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.