ஊரடங்கில் வேலையில்லாததால் மூங்கில் அரிசி சேகரிக்கும் ஆசனூர் மலைக்கிராம மக்கள்

ஊரடங்கில் வேலையில்லாததால் மூங்கில் அரிசி சேகரிக்கும் பணியில் ஆசனூர் மலைக்கிராம மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-06-14 00:41 GMT
தாளவாடி
ஊரடங்கில் வேலையில்லாததால் மூங்கில் அரிசி சேகரிக்கும் பணியில் ஆசனூர் மலைக்கிராம மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மூங்கில் அரிசி சேகரிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
தாளவாடி அருகே உள்ளது ஆசனூர் மலைக்கிராமம். இங்குள்ள மலைக்கிராம மக்கள் வனப்பகுதிக்கு சென்று பொருள் சேகரிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் மலைக்கிராம மக்கள் ஆசனூர் வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள மூங்கில் மரங்களில் இருந்து கீழே விழும் அரிசியை சேகரிக்கின்றனர்.
மலைக்கிராம மக்கள்
இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறும்போது, ‘மூங்கில் மரங்களில் இருந்து நிலத்தில் விழும் அரிசி மண்ணோடு கலந்துவிடுகிறது. இதனால் நாங்கள் முறத்தில் அரிசி வேறு, மண்வேறாக பிரித்தெடுக்கிறோம். நாளொன்றுக்கு 3 கிலோ வரை மூங்கில் அரிசி கிடைக்கிறது.
இது ஒரு கிலோ ரூ.150 வரை விற்கிறோம். இதனால் எங்களுக்கு ஓரளவு கூலி கிடைக்கிறது. இயற்கையாக விளையும் நார்ச்சத்துள்ள மூங்கில் அரிசியை நகர்பகுதி மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாரத்தை பெருக்குவதற்கு மூங்கில் அரிசி சேகரிப்பு பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்