அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்- உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.;
சேலம்:
அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
நிவாரண பொருட்கள்
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளில் 10 லட்சத்து 49 ஆயிரத்து 698 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அதன்படி சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி குரங்குசாவடியில் நேற்று நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. முன்னிலை வகித்தார்.
இதில், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்கள் 350 பேருக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க.வுக்கு வெற்றி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில் ஊரடங்கால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் தி.மு.க. சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறோம்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் தேடி தந்தனர். அதனால் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் ஏற்கனவே ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் இன்னும் 2 நாட்களில் மீதமுள்ள இரண்டாம் தவணை ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகையும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.
தொற்று இல்லா மாநிலம்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தி.மு.க. சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. சேலம் மேற்கு தொகுதியில் சுமார் 89 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும். இன்னும் சில நாட்களில் வீடுகள் தோறும் தி.மு.க. நிர்வாகிகள் வந்து தலா 5 கிலோ அரிசியை வழங்குவார்கள்.
தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு எல்லோரும் அச்சப்படும் நிலையில் கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக நோய் தொற்று குறைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போது தான் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். இந்தியாவிலேயே அதிகளவிலான மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
ரூ.25 லட்சம் நிவாரணம்
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தாங்கள் சேமித்து வைத்த பணம் என மொத்தம் 250 பேர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் கொடுத்துள்ளனர். நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாநகர செயலாளர் ஜெயக்குமார், மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், பகுதி செயலாளர்கள் குமரவேல், ராமச்சந்திரன், சரவணன், தமிழரசன், சேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.