சேலம் அருகே பட்டப்பகலில் துணிகரம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி 5 பவுன் நகை பறிப்பு- தண்ணீர் கேட்பது போல் நடித்து மர்மநபர் கைவரிசை
தண்ணீர் கேட்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அயோத்தியாபட்டணம்:
தண்ணீர் கேட்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தம்பதி
சேலம் அருகே பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சேலம் அருகே அயோத்தியாபட்டணத்தை அடுத்த நீர்முள்ளிக்குட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (வயது 60). இவருடைய மனைவி நல்லம்மாள் (55).
இந்த தம்பதி பூசாரிபட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர். அப்போது ஆறுமுகம் வீட்டுக்கு 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்துள்ளார். அவர், வீட்டில் தனியாக இருந்த நல்லம்மாளிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
நகை பறிப்பு
தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த நல்லம்மாள் வீட்டுக்குள் செல்ல முயன்றார். அப்போது அந்த நபர் நல்லம்மாளை சரமாரியாக தாக்கியதுடன், அவர் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். உடனே நல்லம்மாளை வீட்டுக்குள் தள்ளி விட்டு கதவை பூட்டி விட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
நல்லம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் மாயமாகி விட்டார். காயம் அடைந்த நல்லம்மாளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் மர்மநபரின் சில அடையாளங்களை கண்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் தங்க சங்கிலியை பறித்த நபர், சிறிது தூரத்தில் இன்னொருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி செல்லும் காட்சியும் பதிவாகி உள்ளது. இந்த பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை முடுக்கி விட்டுள்ளனர்.
பட்டப்பகலில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.