கர்நாடகத்தில் இருந்து மதுபானம் கடத்தல்; அண்ணன்- தம்பி உள்பட 8 பேர் கைது
கர்நாடகத்தில் இருந்து மதுபானம் கடத்தி வந்த அண்ணன்- தம்பி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
கர்நாடகத்தில் இருந்து மதுபானம் கடத்தி வந்த அண்ணன்- தம்பி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்களுக்கு விற்பனை செய்ய கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுபானங்களை தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்தி வருவதாகவும்,
அவை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதனால் சேலம் கருப்பூர் சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வாகன சோதனை
நேற்று காலை அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் ஈரோட்டைச் சேர்ந்த விஜயகுமார் (வயதூ 30), மீரான் (35) என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் பெங்களூருவில் இருந்து மதுபானம் கடத்தி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 579 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அண்ணன்- தம்பி கைது
இதேபோன்று அந்த வழியாக வந்த மற்றொரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மதுபான பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. காரில் வந்தவர்களை விசாரித்தபோது அவர்கள் திருச்சியை சேர்ந்த சரவணகுமார் (36), தினகரன் (34), சங்கர் (29) என்பது தெரிந்தது. அவர்கள் பெங்களூருவில் இருந்து மதுபானம் கடத்தி வந்தது தெரிந்தது. இதையொட்டி 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சேலம் தாதகாப்பட்டி பகுதியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அன்னதானப்பட்டி போலீசார் அம்பாள் ஏரி ரோடு பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு ஒரு வீட்டில் மது விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களது பெயர் கனகராஜ் (வயது 34), கிருஷ்ணமூர்த்தி (31) என்பதும், இருவரும் அண்ணன்- தம்பிகள் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் பெங்களூருவில் இருந்து மதுபானம் கடத்தி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்ததாக தெரிகிறது. அவர்களிடம் இருந்து 31 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆத்தூர்
மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் கிழக்கு பாளையம் தாசன் காடு பகுதியில் திடீர் ரோந்து சென்றனர். அங்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் தினேஷ் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 336 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் இளையராஜா (வயது 29). இவர் நேற்று மதியம் ஒரு மோட்டார் சைக்கிளில் 110 லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக கடத்தி கொண்டு வந்த போது ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.