228 இடங்களில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

மதுக்கடை திறப்பதை கண்டித்து 228 இடங்களில் பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-06-13 19:15 GMT
ராமநாதபுரம்,

மதுக்கடை திறப்பதை கண்டித்து 228 இடங்களில் பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுக்கடைகள் திறப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகளை இன்று(திங்கட்கிழமை) திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கண்டித்தும் உடனடியாக மதுக்கடைகளை அடைக்க கோரியும் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் வீட்டின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் நிர்வாகிகள் அவரவர் வீடுகளின் முன்பு டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக அடைக்க கோரி பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.

ராமேசுவரம், ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் அவரது வீட்டின் முன்பு நேற்று கருப்பு கொடியுடன் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ராமச்சந்திரன், நந்தகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் மாநில பா.ஜ.க.செய்தி தொடர்பாளர் து.குப்புராமு, மாவட்ட பொதுச்செயலாளர் குமார், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் குமரன், நகர் தலைவர் வீரபாகு உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பரமக்குடி

பரமக்குடியில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓட்ட பாலம் அருகில் பா.ஜ.க.வினர் வீடுகளின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட வர்த்தக அணி தலைவர் கதி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் மோகன், நகர் இளைஞரணி தலைவர் பால பிரதீப், நகர்மகளிரணி தலைவி கமலா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 இதேபோல் மணி நகர் பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா தலைவர் செல்வேந்திரன் தலைமை தாங்கினார். வர்த்தகப் பிரிவு மாவட்ட செயலாளர் ரெங்கராஜ். துணைத்தலைவர் நயினார் கோவில் நவநீதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் முத்துலிங்கம், ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் முத்து சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு மாவட்டத்தில் ராமநாதபுரம் வட்டாரத்தில் 15 இடங்களிலும், பரமக்குடியில் 35 இடங்களிலும், கமுதியில் 17 இடங்களிலும், ராமேசுவரத்தில் 50 இடங்களிலும், கீழக்கரையில் 80 இடங்களிலும், திருவாடானையில் 10 இடங்களிலும், முதுகுளத்தூரில் 21 இடங்களிலும் என மொத்தம் 228 இடங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்