பாகலூர் அருகே வாலிபரை கொலை செய்து உடல் குட்டையில் வீச்சு-யார் அவர்? போலீசார் விசாரணை
பாகலூர் அருகே வாலிபரை கொலை செய்து அவரது உடலை குட்டையில் வீசிச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்,
ஓசூரை அடுத்த பாகலூர் அருகே உள்ள பிக்கிலி கிராமத்தில் ஒரு குட்டையில் அழுகிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் கிடந்தது. இதுகுறித்து புக்கசாகரம் கிராம நிர்வாக அலுவலர் பாலகூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் கையில் இந்தியில் பச்சை குத்தப்பட்டு இருந்தது தெரிந்தது. மேலும், அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும், கால்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதனால் அவர் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபராக இருக்கலாம் என்றும், மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று கொலை செய்து, உடலை குட்டையில் வீசி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து வாலிபர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், வாலிபரை கொலை செய்து வீசிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். வாலிபர் கொலை செய்யப்பட்டு குட்டையில் வீசப்பட்ட சம்பவம் பாகலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.