மருந்துகளுக்கு வரிச்சலுகைகளை நீட்டிக்க வேண்டுகோள்
கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய் ஆகியவற்றுக்கான மருந்துகளுக்கான அளிக்கப்பட்டுள்ள வரி விலக்கு மற்றும் வரிச்சலுகையை செப்டம்பர் மாதத்திற்குப் பிறகும் நீட்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.
விருதுநகர்,
கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய் ஆகியவற்றுக்கான மருந்துகளுக்கான அளிக்கப்பட்டுள்ள வரி விலக்கு மற்றும் வரிச்சலுகையை செப்டம்பர் மாதத்திற்குப் பிறகும் நீட்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.
உயிர் காக்கும் மருந்து
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப் படைந்தவர்களுக்கு பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த உயிர் காக்கும் மருந்துகளுக்கும் மருத்துவ உபகரணங்களுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் கொரோனா மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து மத்திய அரசு இது குறித்து ஆய்வு செய்ய உயர்நிலை குழு அமைத்தது. இந்த குழு வரி விலக்கு அளிக்கலாம் என கடந்த 7-ந் தேதி பரிந்துரைத்தது.
முடிவு
இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இந்தநிலையில் இந்த கூட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளான ஹெப்பாரின், ரெம் டெசிவர் ஆகியவற்றிற்கான வரிவிதிப்பிலும் மருத்துவ மனையில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் மற்றும் உபகர ணங்கள் மீதான வரிவிதிப்பிலும் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு மருந்துகளுக்கு சரக்கு சேவை வரியில் இருந்து முழுவிலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீட்டிக்க வேண்டும்
இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள் மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே கொரோனா நோய் சிகிச்சையின் போது வழங்கப்படும் மருந்துகளுக்கு சரக்கு சேவை வரியில் இருந்து முழு வரிவிலக்கு அளித்து இருக்கலாம்.
ஆனால் தற்போது இந்த வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது இந்த வரிச் சலுகை மற்றும் வரி விலக்கு செப்டம்பர் மாத இறுதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை
ஆனால் கொரோனா சிகிச்சை என்பது தற்போதுள்ள நிலையில் தொடர்ந்து பெறவேண்டிய நிலை உள்ளதால் செப்டம்பர் மாதத்திற்கு பிறகும் இந்த வரி விலக்கு மற்றும் வரிச் சலுகைகளை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் மூலம் நோய் பாதிக்கப்பட்டோர் பயன்அடைய வாய்ப்பு ஏற்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.