வால்பாறையில் பலத்த மழை சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வால்பாறையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2021-06-13 17:55 GMT
வால்பாறை

வால்பாறையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 

பலத்த மழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் மலைப்பிரதேச மான வால்பாறையிலும் மழை பெய்ய தொடங்கும். தற்போது இங்கு தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. 

இந்த தொடர்மழை காரணமாக வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இந்த நிலையில் திடீரென்று வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சில இடங்களில் பலத்த மழையாகவும், சில இடங்களில் விட்டு விட்டும் மழை பெய்து வருகிறது. 

நீர்வரத்து அதிகரிப்பு 

இந்த மழை காரணமாக இங்கு அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக 160 அடி உயரம் கொண்ட சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. 

இதனால் இந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 51 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 487 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 

அணையில் இருந்து வினாடிக்கு 429 கனஅடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

மழையளவு 

வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டர்) விவரம் வருமாறு:-

வால்பாறை 20 மி.மீ., அப்பர் நீராறு 46, லோயர் நீராறு 27, சோலையார் அணை 16 மி.மீ. மழை பெய்து உள்ளது.

மேலும் செய்திகள்