வாழைப்பந்தல் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை
வாழைப்பந்தல் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலை புதுப்பித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஊர் பொதுமக்கள், பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலவை
கஜேந்திர வரதராஜபெருமாள் கோவில்
கலவையை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தின் மத்தியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி சமேத கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மூலவர் கஜேந்திர வரதராஜ பெருமாள் மேற்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலில் 1975-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கோவிலுக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தைக் குத்தகைக்கு விட்டு அதில் இருந்து பல லட்சம் ரூபாயை வசூல் செய்து வைத்துள்ளனர். கோவிலை பராமரிக்க வேண்டும் எனப் பக்தர்களும், பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தினர். ஆனால் கோவிலை பராமரிக்க யாரும் முன்வரவில்லை.
கோரிக்கை
கோவிலின் ராஜகோபுரத்தில் ஏராளமான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. அதில் பல விஷ உயிரினங்கள் உள்ளன. இதனால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அச்சமாக உள்ளது. கோவிலை சுற்றி முட்புதர்கள் உள்ளது. அதில் இருக்கும் விஷ உயிரினங்கள் கோவிலுக்குள் வலம் வருகின்றன. கோவிலை சுற்றி இருக்கும் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அரசு அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, கோவிலை புதுப்பித்து, வர்ணம் பூசி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஊர் பொதுமக்களும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.