ஆன்லைனில் குக்கர் ஆர்டர் செய்த இளம்பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.22 ஆயிரம் அபேஸ் மோசடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆன்லைனில் குக்கர் ஆர்டர் செய்த இளம்பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.22 ஆயிரத்தை அபேஸ் செய்த மோசடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
விருத்தாசலம்,
பெண்ணாடம் அடுத்த முருகன்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மனைவி ஆதிரை(வயது 25). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், கடந்த 7-ந்தேதி ஆன்லைன் மூலமாக குக்கர், தோசை கல் ஆகிய வீட்டு உபயோக பொருட்களை ஆர்டர் செய்தார்.
அப்போது இதன் மொத்த விலை ரூ.762 என வந்தது. அந்த பணத்தையும் ஆன்லைன் மூலமாகவே அவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வழங்கி விட்டார். ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அவர் கேட்ட பொருட்கள் வரவில்லை.
பணத்தை திரும்ப கேட்டார்
இதையடுத்து அவர், சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு போன் செய்து, தனக்கு இதுவரை பொருட்கள் வரவில்லை, எனவே நான் கட்டிய பணத்தை என்னிடம் திரும்ப கொடுத்துவிடுங்கள், எனக்கு பொருள் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
அப்போது மறுமுனையில் பேசிய நபர், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கொடுங்கள், உங்களது பணத்தை திரும்ப செலுத்துகிறோம் என்று கேட்டுள்ளார். இதையடுத்து ஆதிரையும் வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.22 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நூதன முறையில் மோசடி
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வங்கிக்கு சென்று விசாரித்தபோது ஆன்லைன் வர்த்தகம் செய்த மர்ம நபர்கள் தான் அந்த பணத்தை நூதன முறையில் மோசடி செய்து எடுத்தது தெரியவந்தது.
ஆனால், இந்த பரிவர்த்தனையின் போது ஆதிரையின் செல்போன் எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் எண்கள் எதுவும் வரவில்லை. இதனால் எந்த முறையில் மோசடி கும்பல் பணத்தை அபேஸ் செய்தது என்பது குறித்து தெரியவில்லை.
இது குறித்து ஆதிரை பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி, மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.