டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சில தளர்களுடன் வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
இதன் ஒருபகுதியாக கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் அதன் நிர்வாகிகள் அவர், அவர் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை தலைவர் தமிழ்வாணன், வக்கீல் அணி துணைத் தலைவர் ராமகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், டாஸ்மாக் கடைகளை திறக்காதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர்.