கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளில் 42 பவுன் நகை, ரூ.16 லட்சம் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளில் 42 பவுன் தங்க நகைகள், ரூ.16 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தாசரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). விவசாயி. மாடு வியாபாரமும் செய்து வருகிறார். இவருக்கு, லோகேஷ்குமார் (32) என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர். லோகேஷ்குமார் தன் தந்தையுடன் கோபித்து கொண்டு கடந்த, 8 ஆண்டுகளாக ஓசூரில் தன் மனைவி, குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
முதல் மகள் திருமணமாகி, கிருஷ்ணகிரி ராசுவீதியில் வசித்து வருகிறார். 2-வது மகள் புவனேஸ்வரி (28), விபத்தில் கணவர் இறந்து விட்ட நிலையில் தற்போது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். புவனேஸ்வரி வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
மயக்க பொடி தூவி...
நேற்று முன்தினம் புவனேஸ்வரி பெட்டிக்கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது முகத்தில் கைக்குட்டை கட்டியபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் புவனேஸ்வரியிடம் குளிர்பானம் கேட்டனர். அப்போது திடீரென அவர்கள் மயக்கபொடியை எடுத்து புவனேஸ்வரி முகத்தில் வீசினர். இதனால் அவர் மயக்கமடைந்தார்.
இதையடுத்து அவர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கு பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், அரிசி, ராகி டப்பாக்களில் மறைத்து வைத்திருந்த ரூ.16 லட்சம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது புவனேஸ்வரி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
15 பவுன் நகை திருட்டு
கிருஷ்ணகிரி நேதாஜி ரோடு டாடா நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானசவுந்தரி. இவர் தனது மகன் ரகுராமுடன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் பெங்களூரு சென்றனர். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் அவர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த வளையல்கள், மோதிரம், கம்மல் என 15 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடினர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அக்கம்பக்கத்தினர், வீடு திறந்து கிடப்பதாக ரகுராமுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் விரைந்து சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நகைகள், பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள், பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
முன்னாள் ராணுவ வீரர்
கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளையபெருமாள் (39). முன்னாள் ராணுவ வீரரான இவர் தன் குடும்பத்துடன் காவேரிப்பட்டணத்தை அடுத்த வட்டம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரியில் 3 வீடுகளில் 42 பவுன் நகைகள், ரூ.16 லட்சத்து 10 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.