கடன் தொகை கேட்டு கட்டாய வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் நிதி நிறுவனங்கள், வங்கிகள் கடன் தொகை கேட்டு பொதுமக்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-06-13 17:14 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பின்னா் அவர் கூறுகையில், மகளிர் சுய உதவி குழுவினர், சுயதொழில் செய்பவர்கள் வங்கிகள் மற்றும் தனியார் நுண்நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று பல்வேறு வியாபாரம், தொழில்கள் செய்து வருகின்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கால் கடன் பெற்றவர்கள், தங்கள் கடன் தொகையை திரும்ப செலுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகையினை வசூலிப்பதில் மிகக் கடுமையான போக்கினை கையாளுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வருகின்றன.

நெருக்கடி

அதனால் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு எந்த வங்கிகளும், நுண் நிதி நிறுவனங்களும் சுய உதவி குழுக்கள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கடனில், கூடுதல் தொகை வழங்கவும், கடன் தொகையை திருப்பி செலுத்தும் காலகட்டத்தில் 12 மாதங்கள் வரை தள்ளி வைக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பெற்றுள்ள கடன்களை நெருக்கடி கொடுத்து வசூலிக்கக் கூடாது. 

கட்டாய வசூல்

கடன் தவணைகள் முறையாக செலுத்த விரும்பும் சுய உதவிகுழு பயனாளிகளிடம் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களது பணியாளர் மூலம் கடன் தொகையை வசூலிக்கும் போது எவ்வித நிர்பந்தத்திற்கும் உட்படுத்தக் கூடாது. மீறி கட்டாய வசூலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் மீது ஏதேனும் புகார் இருந்தால் பொதுமக்கள் 18001021080 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 
மேலும் 04146-223734, 9444094474 என்ற எண்களிலும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் லலிதா மற்றும் வங்கி மேலாளர்கள், நுண் நிதி நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்