குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ அரிசி உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வழங்கி தொடங்கி வைத்தார்
கரூர் மாவட்டத்தில் ‘ஒன்றிணைவோம் வா' திட்டம் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கும் பணியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;
கரூர்
அரிசி வழங்கும் நிகழ்ச்சி
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க. சார்பில் ‘ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 19 ஆயிரத்து 816 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,279 டன் அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை கரூர் பசுபாளையத்தில் நடைபெற்றது.
இதற்கு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ அடங்கிய அரிசி வழங்கி அந்த பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டாலின் அறிவித்த திட்டம்
‘ஒன்றிணைவோம் வா' என்ற திட்டம் மக்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தலைவர் ஸ்டாலின் அறிவித்த திட்டம். முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜூன் 3-ந்தேதி கொரோனா நிதியாக தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதாக கூறியிருந்தார். அதன்படி 3-ந்தேதிக்கு முன்பே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
தற்போது 2-வது தவணையாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி தி.மு.க. சார்பில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி கரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 20 ஆயிரம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தலா 4 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
முன் மாதிரி மாநிலமாக...
தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அனைவரும் இன்னும் 15 நாட்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முககவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு தமிழகத்தை இந்தியாவிலையே முன் மாதிரி மாநிலமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதிகளை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர்.