திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டி நிலையத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டி நிலையத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2021-06-13 16:27 GMT
திருப்பூர்,
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் செறிவூட்டி நிலையத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஆக்சிஜன் செறிவூட்டி நிலையம்
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன்ஸ் சார்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டி நிலையத்தினை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
தொடர்ந்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் ரூ.70 லட்சம் மதிப்பில் ஒரு நிமிடத்தில் 350 கிலோ லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் செறிவூட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 
ஏற்கனவே 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் தொட்டி பயன்பாட்டில் உள்ளது. ஆக்சிஜனை பொறுத்தவரையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தேவையை தாண்டி, உபரி ஆக்சிஜன் கையிருப்பு வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. 15 நாட்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 2 ஆயிரம் என்ற அளவிற்கு இருந்தது. ஆனால் தற்போது 800 என்ற அளவில் நாள் ஒன்றின் பாதிப்பு இருந்து வருகிறது. அரசு வழிகாட்டுதலை பின்பற்றி கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் கூடிய 110 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையத்தினை தொடங்கிவைத்தார். இதனால் அரசு மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை இருந்த நிலை மாறி தற்போது தேவையான அளவு உள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொறுத்தவரை 410 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய படுக்கைகளும், 100 ஆக்சிஜன் வசதியில்லாத படுக்கைகளும் உள்ளது.
317 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சையிலும், 193 படுக்கைகள் காலியாகவும் உள்ளன. மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி முதல்-அமைச்சர் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறார். பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்றி முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிகிச்சை மையம்
முன்னதாக திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட பல்லவராயன்பாளையம் ஸ்ரீராம் சந்திரா மிஷன் வைர விழா பூங்கா வளாகத்தில் இயற்கை சூழலில் அமைக்கப்பட்ட 200 படுக்கை வசதி கொண்ட சேவாபாரதி மற்றும் ஹார்ட்புல்னெஸ் கொரோனா சிகிச்சை மையத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் ஆர்.டி.ஓ.ஜெகநாதன், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இல.பத்பநாபன், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜ், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் மற்றும் தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்