நன்னிலம் ஒன்றியத்தில் ஆறுகளில் மதகுகளை பராமரிக்கும் பணிகள் தீவிரம் கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை

நன்னிலம் ஒன்றியத்தில் ஆறுகளில் மதகுகளை பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-06-13 15:06 GMT
நன்னிலம்:-

நன்னிலம் ஒன்றியத்தில் ஆறுகளில் மதகுகளை பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை திறப்பு

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். தண்ணீர் இருப்பு இல்லாத ஆண்டுகளை தவிர்த்து பிற ஆண்டுகளில் மேட்டூர் அணை குறித்த தேதியில் அதாவது ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு போதுமான அளவு இருந்ததை தொடர்ந்து கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 
குறித்த தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணைநீர் வருகிற 16-ந் தேதி கல்லணையை வந்தடைந்து, பின்னர் காவிரி, வெண்ணாறு, புது ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. 

வண்ணம் பூசும் பணி

கடைமடைக்கு தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர், அறிவுறுத்தி உள்ளார். அதன்படி டெல்டாவில் ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் ஆறுகளில் உள்ள மதகுகள் மற்றும் வாய்க்கால் மதகுகளை பராமரித்து, வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
இதில் மதகுகள் முறையாக இயங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நன்னிலம் ஒன்றியத்தில் கங்களாஞ்சேரி வெட்டாறு ஒரு முக்கியமான ஆறாகும். இந்த ஆற்றில் பலமுறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றில் உள்ள மதகு பாலத்தில் 6 கண்மாய்கள் உள்ளன. இதனை பராமரிக்கும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதகில் வண்ணம் பூசப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. கடைமடை வரை தண்ணீர் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்