சாராயம் கடத்திய 6 பேர் கைது

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-06-13 14:32 GMT
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் கடத்திய 6 பேரை போலீசார் கைது  செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

சாராயம் கடத்தல்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம்  காரைக்கால் பகுதிகளில்  கடந்த 8-ந் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.. இதனால் அங்கிருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வருவதை தடுக்க நாகை மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் சிக்கல் கடைதெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக  வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி  சோதனை  செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை  பிரித்து பார்த்த போது  சாராயம் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர்கள்,  நாகை, பாப்பாகோவில் சமத்துவபுரத்தை சேர்ந்த  வனராஜன் மகன் முரசொலிமாறன் (வயது 27 ), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் சசிகுமார் ( 23) என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

இதே போல  கீழ்வேளூர்  காக்கழனி பகுதிகளில் 4 மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி  கடைத்தெரு பகுதியை சேர்ந்த ராமையன் மகன் போத்திராஜ் ( 32), கோட்டூர் தெற்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன்  இளவரசன் ( 24), எடையூர் வஞ்சி கோட்டகம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் மோகன்ராஜ் (33), கீழ்வேளூர் அருகே புதுச்சேரி கீழத்தெரு பழனிச்சாமி மகன்  ஜெயசீலன் ( 39), ஆகிய 4 ஆகிய பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து  தலா 10 லிட்டர் சாராயம்  மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.




மேலும் செய்திகள்