பயிற்சி முடித்த 66 வீரர்கள் சத்தியபிரமாணம் எடுத்தனர்
எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் பயிற்சி முடித்த 66 வீரர்கள் சத்தியபிரமாணம் எடுத்தனர்.
குன்னூர்,
எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் பயிற்சி முடித்த 66 வீரர்கள் சத்தியபிரமாணம் எடுத்தனர்.
கடுமையான பயிற்சிகள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர்(எம்.ஆர்.சி.) ராணுவ மையம் உள்ளது. இது இந்திய ராணுவத்தில் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ராணுவ மையத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஆயுதங்களை கையாளுதல், இந்தி மொழி கற்றல் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சுமார் 10 மாதங்கள் கடுமையான பயிற்சிகளுக்கு பிறகு வீரர்கள் எல்லைகளில் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சத்திய பிரமாணம்
அதன்படி எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் பயிற்சி முடித்த 66 இளம் ராணுவ வீரர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி, அங்குள்ள நாகேஷ் பேரக்சில் நேற்று நடந்தது. அதில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு எம்.ஆர்.சி. ராணுவ மைய கமாண்டெண்ட் பிரிகேடியர் ராஜேஷ்வர்சிங் தலைமை தாங்கினார். தொடர்ந்து இளம் ராணுவ வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர். பின்னர் கைகளை நீட்டி உறுதிமொழி எடுத்தனர்.
இதையடுத்து பயிற்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட இளம் ராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது. பயிற்சி முடித்த 66 பேரும், பாதுகாப்பு பணிக்காக எல்லைகளில் உள்ள பல்வேறு படை பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.