திருத்தணியில் ரூ.3 லட்சம் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது மற்றொரு சம்பவத்தில் குட்கா கடத்திய கடைக்காரர் சிக்கினார்

திருத்தணி அரசு கலைக்கல்லூரி எதிரே ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-06-13 11:43 IST
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேதினிபுரம் என்ற இடத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி எதிரே உள்ள பஸ் நிறுத்த பகுதியில் நேற்று மாலை சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வாலிபர் நிற்பதைக் கண்ட திருத்தணி ரோந்து போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அந்த வாலிபரிடம் சோதனை செய்ததில் அவரது பையில் 1½ கிலோ எடைகொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். மேலும் போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் திருத்தணி அருகில் உள்ள பட்டாபிராமபுரம் பகுதியை சேர்ந்த சற்குணம் (வயது 26) என்பதும், அவர் மீது திருத்தணி தி.மு.க. பிரமுகர் மீது நடந்த கொலை முயற்சி செய்த வழக்கு, பா.ம.க. பிரமுகர் மீது நடந்த கொலை முயற்சி செய்த வழக்கு மற்றும் சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை பஜார் தெருவில் கொரோனா தொற்று காரணமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து ஒரு சொகுசு கார் மிக வேகமாக ஆர்.கே. பேட்டை நோக்கி வந்தது.

அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.1 லட்சம் மதிப்புள்ள 30 குட்கா பண்டல்களை போலீசார் கைப்பற்றினர். அதில் 1,500 குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. இது தொடர்பாக திருத்தணி நகராட்சி எதிரே கடை வைத்து நடத்தி வந்த செல்வராஜ் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை பள்ளிப்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, திருத்தணி சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்