ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்

காஞ்சீபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம விதிக்கப்பட்டது.

Update: 2021-06-13 05:57 GMT
காஞ்சீபுரம்,

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை கராணமாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் வருகிற திங்கட்கிழமை முதல் மளிகை கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை, சலூன், துணி கடைகள் போன்றவைகள் ஏ.சி. இல்லாமல் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், காஞ்சீபுரம் பெருநகராட்சி பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார் வந்தது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையருக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர், காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் காஞ்சீபுரம் செங்கழுநீரோடை வீதி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 25-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து தலா ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்தார். மேலும் ஊரடங்கு விதிகளை மீறி மீண்டும் கடைகள் திறக்கப்பட்டால் சீல் வைக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாகவே பல்வேறு கடைகள் விதிகளை மீறி திறக்கப்பட்டு, சுப முகூர்த்த நிகழ்ச்சிகளுக்காக விற்பனை ஜோராக நடைபெற்றுள்ளதால் காஞ்சீபுரத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்