தைலாவரத்தில் கோவில் பூசாரிக்கு அரிவாள் வெட்டு

செங்கல்பட்டு மாவட்டம், தைலாவரத்தில் கோவில் பூசாரியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

Update: 2021-06-13 05:47 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 49). மாநகர போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் தைலாவரம் அம்பேத்கர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் நிர்வாகியாகவும் உள்ளார். கோவில் எதிரே மேற்கு பக்கமுள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்ததாக ஏற்கனவே கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் மனோகரன் புகார் செய்திருந்தார்.

இது சம்பந்தமாக மனோகரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சுந்தருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவில் பூசாரி கண்ணன் (48) சாமிக்கு பூஜை செய்துவிட்டு, எலுமிச்சம் பழத்தை சுற்றி கோவில் வெளியே போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோவில் பூசாரியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் கோவில் பூசாரி கண்ணன் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூசாரியை அரிவாளால் வெட்டியதாக சுந்தர் என்கிற சுந்தரராஜ் ( 53) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்